Posted in Mylapore Musings

மாதங்களில் அவள் மார்கழி

சின்ன வயசுல ஞாபகம். நாலு மணிக்கே எழுந்து சுட சுட பாட்டி போட்ட பில்டர் காபியும் கையுமா மாடிலேந்து மளமளனு படியிறங்கி குதிச்சு ஓடுவேன் மார்கழி மாசத்துல. கீழ என் தோழி எனக்கும் முன்னமே கூட எழுந்து காத்துண்டு இருப்பா. ரெண்டு பெருமா சேர்ந்து தான் படி படியா அளந்து கோல மாவு வாங்குவோம். மப்ளர் கட்டிண்டு போ. பனி ஆகாதுன்னு பாட்டிகள் ரெண்டு பேரும் தொண்டை கிழிய கத்தினாலும் காதுல வாங்கமாட்டோம். அப்படி ஒரு வெறித்தனமான கோலஆர்வம். அந்த வயசுக்கும் காலத்துக்குமே உரியது. நான் வாசல் பெருக்கி தெருவை கூட்டினா அவ தண்ணி தெளிப்பா. மாறி மாறி செஞ்சுப்போம். அறுபத்தெட்டில் ஒரே மாஸம் ஒரே நாள் பொறந்தவங்களாச்சே. எங்க பக்கத்து வீட்டு அக்காக்கள் அவள் ஒரு தொடர்கதை நாயகி போல. ஆனா அந்த சோகத்திலும் ஒரு அக்கா அப்படி ஒரு கோலம் போடுவா. மை போல கருப்பு. கரு கரு பின்னி முடித்த மயிர் முழங்காலை தாண்டி. வளைஞ்சு வளைஞ்சு அவ போடும் கோலத்தை பாக்கவே காலைல அஞ்சு மணிக்கு கூட ஒரு மாமிகள் கூட்டம் வட்டமிடும். தெரு பூராவும் கோலம் போடுவோம். நான்கிலேந்து ஆறு வர லேடீஸ் கிளப் ஆகிவிடும் எங்க வாசல். காபி பரிமாற்றத்துலேந்து சமையல் குறிப்பு வர எல்லாம் பேசுவோம் வயது வரம்பு இல்லாம. ஆறு மணிக்கு மேல தலைக்கு மேல வேல இருக்கும் ஆனா மார்கழி மாசத்துல லேடீஸ் அடிக்கும் கொட்டம் இருக்கும் பாருங்க. அப்டியே தெரு முழுசா அதி கால காலாற நடந்து ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் நின்னு அந்த வீட்டு கோலம் டிஸ்கசன் வேற! என் கல்யாணம் ஆகும் வரை நான் ரசிச்சுஅனுபவிச்ச ரம்யமான பனி காலை பொழுது அது. கோலம் போடும்போதே மயிலாப்பூர் கபாலி கோவில் மணியோசை கேக்கும். சிவன் கோவில் காலைல தொறந்துடுவான். பெருமாள் கோவிலும் தான். மார்கழி ஸ்பெஷல். எங்க வீடு வர கோவில் மணி சப்தம் வரும். அந்த கால அமைதி. உடனே ஒரு குளியல் போட மனசே இல்லாம வீட்டுக்குள்ள நுழைவோம். தற்காலத்துல நெனச்சு பாக்க முடியாத ஒரு சுவாரஸ்யமான வாழ்நாள் அது .. பணம் காசு பத்தி யோசிச்சோமா. இல்ல ஜாதி தான் வந்ததா குறுக்க. எங்க தெருல எல்லாரும் உண்டு: அய்யர், அய்யங்கார், முதலியார், நாடார், செட்டியார். ஒரு குடும்பமா தான் இருந்தோம். எல்லாரும் அக்கா அண்ணா மாமி மாமா பாட்டி தாத்தா தான். சின்ன விஷயங்கள்ல சந்தோசம் கண்டோம். ஒண்ணா படத்துக்கு போவோம். பீச்சுக்கு போவோம். மார்கழி கோலம் போடுவோம். தீபாவளி பண்டிகை கொண்டாடுவோம். நடுத்தற வர்கத்துக்கான பாச பந்தா பிணைப்பு அப்டி. மறக்க முடியாத நாட்கள். இதுக்கு நடுல மார்கழில ஆருத்திரா வைகுண்ட ஏகாதசி வரும். தாயக்கட்டையும் பரமபதமும் மணிக்கணக்கா நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு ராப்பூரா கண்முழிச்சு அதிகாலை கோலம் போட்டு தூங்குவோம். .அந்த ஒரு நாள் மட்டும் விமலா மாமிக்கு கோலம் போட எங்க வாசலை விட்டு கொடுப்போம் அந்த கற்பனை கோலம் படி கோலம் போட. மாமி அய்யங்கார். நாங்க நாலு குடித்தனம் அந்த ஒரு வீட்ல. இன்னிக்கும் தாயா மகளா தான் பழகறோம். ஆருத்திரா சாந்தும் உண்டு கோவில்ல. பெருமாள் பிரசாதம் உண்டு. திருப்பாவை திருவெம்பாவை பாடாத நாளே கிடையாது. எல்லாமே கூட்டமா கும்பலா தான். அப்போவெல்லாம் தெருல பஜனை கோஷ்டி கூட வரும். ஆழாக்கு அரிசி கொண்டு வந்து கொடுத்து ரோட்லயே அவா கால்ல விழுந்து சுத்தி வருவோம். கோவிந்தா கோவிந்தா கூட உண்டு. எண்பதுகள்ல டீனேஜ் காரங்களா இருந்தவர்களுக்கு புரியும். நெனச்சாலே இப்போ ஏக்கமா இருக்கு.

டிசம்பர் பூ இல்லாத மார்கழியா. எல்லா கலர் செடியும் வெச்சிருந்தோமே மொட்டைமாடில: வெள்ளை,ஊதா, மஞ்சள். டிசம்பர் பூ வெக்காம ஸ்கூல் போயிருக்கோமா மார்கழில. மார்கழி மாசத்துல எங்க வீட்டு தேங்காய் எண்ணெய் கூட உறையும் அந்த காலத்தில. செப்பு பாய்லர்ல வெந்நீர் போட்டு குளிக்கும் சுகம் தனி.

கல்யாணமான உடனே எல்லாம் மாறி போச்சு. அப்போ மார்கழின்னா எனக்கு அதிகாலை முதல் டிகாக்ஷன் எடுத்து கிச்சன் மேடை மேல யாரும் எழுந்துக்காத பொழுது ஏறி ஒக்காந்து டேப்ரெகார்டர்ல எம் எஸ் குரல்ல வெங்கடேச சுப்ரபாதம் கேட்டுண்டே முதல் தடவை காச்சின பால்ல காப்பிபோட்டு தனியா அஞ்சு நிமிஷம் மௌனமா ரசிச்சு குடிக்கறது அலாதி சுகம். கூட்டு குடும்பம் சில நாள். பின்னாடியே கைல குழந்தை. அப்புறமா தனி குடித்தனம். சமையல் முடிச்சு, குழந்தையை ரெடி பண்ணி மாமியார் கைல கொடுத்துட்டு,லஞ்ச் பேக் பண்ணி ஆபீஸ்க்கு ஓடணும் பஸ் பிடிச்சு. மார்கழி கோலம் நெனச்சு பாக்க முடியாதது ஆச்சு. அந்த அதிகாலை அஞ்சு நிமிஷம் தான் அப்போ மெஷின் வாழ்க்கைல அமைதின்னு கூட தோணும். அஞ்சு மணிக்கு இந்த சேத்துப்பட்டு ஷெனாய் நகர்ல டிசம்பர் மாசம் கிறிஸ்துமஸ் கரோல் தான் தினசரி காதுல விழும். திருப்பாவை எங்க. அதிகாலைல என் சமையல் ரூம் வெளிச்சத்தை பாத்து ஒரு கிறிஸ்டியன் குரூப் டெய்லி எனக்கு கரோல்ஸ் பாடிட்டு போவாங்கன்னா பாத்துக்கோங்க! அமிஞ்சிக்கரை மசூதிலேந்து அப்டியே விடிகாலைல ஆசான் ஒதரத்துக்கு கூப்பிடறது லௌட்ஸ்பீக்கர் மூலமா எங்க வீடு வர கேக்கும். கடவுளை எந்த ரூபத்துல பாத்தா என்ன. அப்போ நெனைச்சுப்பேன் என்ன ஒரு மாற்றம்னு வாழ்கைலன்னு. மார்கழி அப்டியே தலை கீழா ஆச்சு! நாளடைவில் அதையே ரசிக்க பழகிக்கிட்டேன்.

மார்கழின்னா இன்னொரு விஷயம். கர்நாடக சங்கீதம் . சொல்லவே வேண்டாம். எனக்கு மயிலாப்பூர்ல கோவில்ல கர்நாடக இசை கேட்டு தான் வழக்கம். பல வருஷம் கெழச்சு பாட்டி ஆனதுக்கு அப்புறமா இப்போ அதுக்கு நேரம் வந்திருக்கு. வயசுல கிடைக்காதது அது. ஸ்கூல் போற பையன், மாமியார், சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வீட்ல அடைய வேண்டிய நிர்பந்தம். இதெல்லாம் சேர்ந்து இசைய கொஞ்சம் தள்ளியே வெச்சது. மார்கழின்னாலே ஆனா மொதல்ல நினைவுக்கு வர்றதே கர்நாடக இசை தானே. புள்ளி வெச்சு போடும் கோலம் போல. ஆனாலும் ஜெயா டிவி ல வரும் கச்சேரியை கேக்க தான் செஞ்சிருக்கேன். இவ்ளோ நேரம் அதுக்கு ஒதுக்கியது இல்லையே தவிர. சின்ன வயசுல கொஞ்சம் பாட்டு வீணை கத்துண்டதால லைட்டா இன்டெர்ரெஸ்ட் அவ்ளோ தான். மயலப்பூ ஆச்சே இருக்காதா பின்ன. வருஷத்துக்கு ஒரு பரதநாட்டியமோ இல்ல கச்சேரியோ எப்பிடியும் கேட்டுடுவேன் பட் வாத்திய இசையா இருக்கும்… வாய்ப்பாட்டு அபூர்வம் போய் கேக்கறது. ஸ்டில் கர்நாடக மேடை கச்சேரி இல்லாத மார்கழி நெனச்சு பாக்கவே முடியாது.

மார்கழில இன்னொரு விஷயம் அய்யப்ப வழிபாடு கார்த்திகை தொடங்கி. உச்சகட்ட நிலைல இருக்கும் ஐயப்ப பூஜை. மார்கழில முக்கிய பண்டிகைன்னு கெடையாது. திருவாதிரைக்கு களி கூட்டு பண்றது தான் பெரிய வேலையே. வைகுண்ட ஏகடாஷிக்கு க்யூவில் நின்னு சாமி பாத்து அகத்திகீரை வாங்கி பசுக்கு குடுப்பது தவறினது இல்ல. அமிஞ்சிக்கரை பெருமாள் கோவில்லயும் செஞ்சிருக்கேன் முடிஞ்ச வரை. மார்கழி முடியறதும் திருவையாறு கச்சேரியும் மகர விளக்கும் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும்.

போகி பண்டிகைய ரசிச்சதே இல்ல ஏன்னா, என்னோட விருப்பமான மார்கழி முடிவுக்கு வர்றதே எனக்கு உடன்பாடு இல்ல எப்பவுமே! ஏசியை சுவிட்ச் ஆப் பண்ணற ஒரே மாசம் கூட இந்த மார்கழி மாசம் தான். வருஷத்துல ஒரு மாசமாவது இயற்கை காத சுவாசிப்போம். சுக்கு காபியும் இஞ்சி டீயும் வேரா எப்ப குடிக்க முடியும் சொல்லுங்க! குளிர் காலமே இல்லாம இருக்க நம்மூருக்கு கொஞ்சம் வசந்தமா வர்றது மார்கழி தானே. போகி போட்டு எதுக்கு அதா தொரத்தறது. மார்கழி மாசம் செடியை பாத்திருக்கீங்களா. பூல்லாம் எவ்ளோ பிரெஷ். இலைல எல்லாம் பனித்துளி. நான் ஸ்வெட்டெர்றே போட்டதில்ல நம்மூர்ல மார்கழில. மார்கழி பனியை விட அதிகமான குளிர வெளியில உணர ஆரம்பிச்சேன். இப்பவும் எனக்கு மார்கழி தான் புடிச்ச மாசம். அடுத்தது ஆடி மாசம் – அம்பாளுக்காக. இந்த மார்கழி நாள் தான் எவ்ளோ சுகமானது. இப்போ கோலம் போடல. தனிமைல காபி உறிஞ்சு உறிஞ்சு சுலோகம் கேட்டுண்டே குடிக்கல. ஆனாலும் மார்கழி மார்கழி தான். இன்னும் சொல்ல போனா இப்பெல்லாம் இயர் எண்டு சேல் கூட மார்கழில தானாக்கும்! புது வருஷ பொறப்பும் மார்கழில தான். என்ன தான் தமிழ் வருஷ பொறப்பு கொண்டாடினாலும் நம்மளால ஜனவரி ஒன்னு ஆட்டம் பாட்டத்த நிறுத்த முடியுமா. இல்ல கோவிலுக்கு தான் போகாம இருக்க முடியுமா. வருஷாந்தர டூர் போக கூட ஒத்த நேரம் டிசம்பர் கடைசி.

வருஷா வருஷம் நான் காத்துண்டு இருக்கறதே இந்த டிசம்பர் மாசத்துக்காக தான். மார்கழி போல ஒரு மாசம் உண்டா. அரபு நாட்ல அப்டி இருக்கும் இந்த காலம். கோவிட்டாலே எல்லாம் மாறி போச்சு. இல்லைன்னா எல்லாம் ஒரே பிகினிக் தான் பார்க் பர்கா. பேக் வாட்டர்ல போட்டிங் தான். அந்த பனியை அணுபக்கவே ஒரு கூட்டம். ஸுக் பக்கம் போனா அவன் அவன் ஹூகாஹ் பிடிச்சுண்டே சாயங்காலம் தொட்டு ஒக்காந்து இருப்பான். டைனிங் எல்லாம் அவுட்டோர்ல தான். அமெரிக்காவிலும் டிசம்பர் மாசம் முதல் தடவை போனமோது இருந்தேன். பிளோரிடாவிலும் அரிஸோனாவிலும் எங்க தோஹா மாதிரி பனி உறையாத மிதமான குளிர். மலேசியாவிலும் கூட நம்ம தமிழ் நாட்டு மார்கழி குளிர் தான். ரசிக்க முடியற குளிர். அனுபவிக்க தூண்டற குளிர். நம்மள வீட்டுக்குள்ள அடைக்கற ஐஸ் கட்டி குளிர் இல்ல. இப்போவெல்லாம் ஒரு ஸ்வெட்டரோ ஷால்வோ போட்டுண்டு தோஹால வாக்கிங் போறேன். கோவிட்டாலே கச்சேரி கூட ஆன்லைன் தான். இவ்வளவு வருஷம் இந்த பாக்கியம் அமைஞ்சதே இல்லன்னு சொன்னா என்ன கைல கெடச்சது வெச்சுண்டு அடிக்க வர்றாதீங்க! முதல் முறையா ப்ரொவ்சிங் பண்ணி கோலம் போட்டு பேஸ்புக்ல ஷேர் பண்றேன். கோவிலுக்கு போகாமையே கடவுளை வீட்டுக்குள்ள தேட இங்க தான் கத்துக்கிட்டேன். காலத்துக்கு ஏத்த மாதிரி மாறி தானே ஆகணும். ஏன் நம்ம மயிலாப்பூர் மாறிடலையா. நான் வளர்ந்த ஊரே அது இல்ல. காலமும் வேற. அந்த குடும்பம் எல்லாம் இப்போ எங்கயோ எப்டியோ பிரிஞ்சு சிதறி போச்சு. இப்போ அங்க கூட யார் ஒருத்தருக்கொருத்தர் முகம் கொடுத்து பேசறது. ஓட்டு வீடு எல்லாம் போச்சு எங்க தெருல. இது இல்ல எங்க வீடு. அந்த இனிய இளமை காலத்துக்கும் இப்பத்துக்கும் பாலமா இருக்கறது இந்த மார்கழி நினைவுகளே.

எத்தனை சினிமா பாட்டு மார்கழியை வெச்சு. மார்கழி பூவே மார்கழி போவேன்னு ஒன்னு. மார்கழி திங்கள் அல்லாவான்னு ஒன்னு. ஆனா எனக்கு பிடிச்சது எப்பவுமே மாதங்களில் அவள் மார்கழி தான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.