Posted in Lateral Thinking

பாலசந்தர் கண்ட புதுமைப்பெண்

Ilakkanam maarudho? Ilakkiyam aanadho?…. this post is dedicated to my girl friends from the 80s who define the incomparable Kannadasan verse in everyway.

பாரதி கண்ட புதுமை பெண் கேள்வி பட்டிருப்பீர். ஆனால் யார் இந்த பாலசந்தர் கண்ட புதுமை பெண்?

இயக்குனர் சிகரம் திரு கே பாலசந்தர் அவர்கள் படைத்த எண்ணற்ற திரை காவியங்களின் உயிரோவியம் மற்றும் உயிரோட்டம் ஆகிய துணிந்த தலை நிமிர்ந்த தமிழ் பெண்ணையே நான் பாலசந்தர் கண்ட புதுமை பெண் என்பேன்.

ஒரு வகையில் நானும் ஒரு பாலசந்தர் கண்ட புதுமை பெண் தான். எண்பதுகளில் பள்ளி பருவம் பயின்ற என் தலைமுறையை வேறு என்ன சொல்வது? .பாலசந்தர் எண்ணி எண்ணி செதுக்கிய சிற்பம்அல்லவா நாங்கள்? அன்று அவர் தந்த ஊட்டமே இன்று எங்கள் பலம் மற்றும் துணிச்சல்…

நான் பதினொன்றாம் வகுப்பு பயிலும் போது வெளி வந்த திரைக்காவியம் தான் அனல்  பொறிக்கும்   ‘சிந்து பைரவி.’ பின் வந்தாள் நந்தினி சிஸ்டர் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைக்கதை மூலம். நந்தினி சிஸ்டர் ஆகவே மாறிவிட மாட்டோமா என்று எண்ணி ஏங்கிய காலம் கூட உண்டு. நந்தினியின்  விதி தான் எவ்வளவு கொடியது. வாழ்கை என்ன அவ்வளவு சுலபமா? யாருக்கு வேண்டும் இந்த நந்தினியின் வாழ்கை. எனினும் புயலாய் வீசிய இந்த தென்றலில் தான் என்ன ஒரு சுகம். போராட்டம் தான் வாழ்கை என்றல், நந்தினி தான் என்ன செய்வாள்? நந்தினியை புயல் என்று நினைக்கும் போதே, பூ போன்ற பேதை பெண்ணாகிய பைரவியும் நினைவுக்கு வருவாள் நம் சிந்தையில். சிந்து பைரவியில் சிந்து எவ்வாறு ஐம்பது சதா விகிதமோ அவ்வாறே மென்மையான மொழி பேசிய பைரவியும் ஐம்பது சதவிகிதம். பட பெயரிலேயே தெரியவில்லையா?  எத்தனை மாறு பட்டஇனம்  நம் பெண்ணினம்?

உண்மையில் என் தலைமுறை தான் பாலசந்தர் தலைமுறையா என்ன? என் அன்னையின் தலைமுறையும் அல்லவா அவரை சொந்தம் கொண்டாடுகின்றது!

நீற்குமிழி யில் ஆரம்பித்தது அவரது நீண்ட பயணம். பயணம் அல்ல, அது ஒரு சகாப்தம். வெறும் ஒரு ஆஸ்பத்திரி வார்டை வைத்து செவ்வனே எடுத்த படம். மருத்துவரின் சுயநலமற்ற சேவை உணர்ச்சியை பிரதிபலிக்கும் கதை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. இப்படியும் ஒரு தலைப்பு கொண்டு பின்னாளில் ஒரு படம் வந்தது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றால் என்ன வென்று அறிய ‘நீர் குமிழி’ பாருங்கள். இந்த வார்த்தையே அதில் இல்லை. சொல்லில் என்ன இருக்கிறது. செயலில் தானே அவ்வளவும் உள்ளது. சொல்வது சுலபம். செய்வது அரிது.

‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று அன்று தொடங்கியது அவரது சேதி சமூகத்திற்கு. மூன்று நடுத்தர வர்க்க நாயகிகள். என்ன சலனங்கள். ஊடல்கள். திரை உலகை சேர்ந்த கவர்ச்சி கன்னியே எனினும் நடிகையும் ஒரு பெண் தானே? என்ன நிதர்சனமான உண்மை. தமிழ் திரைப்பட உலகில் அதுவரை காணாத கோணத்தில் பெண்ணினத்தை காண்பித்தார் கே பீ , ‘பாமா விஜயம்‘ வாயலாக.

நீர்க்குமிழி உடைத்தது சராசரி மனிதனின் அவல புத்தியை. ‘எதிர் நீச்சல்’ வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா என்று நடுத்தெருவில் போட்டு உடைத்தது  உலகறிந்த உண்மையை… நாகேஷ் என்ற சிரிப்பு நடிகனின் குணச்சித்திர நடிப்புத்திறனை படம் போட்டு காண்பித்தது….

உண்மையில் நாகேஷின் ‘சர்வர் சுந்தரம்‘ இன்னும் ஒரு படி மேலே. உலகையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகருக்கு இப்படி ஒரு சோக கதாபாத்திரமா. அவர் கையாள்வாரா… இந்த ஐயம் சிறிது கூட இல்லைப்போலும் கே பி சாருக்கு. அவர்  வைத்த நம்பிக்கை தான் வீண் போனதா. நெஞ்சை உருக்கும் காவியமாக வெளிவந்தது ‘சர்வர் சுந்தரம்.’

ஆணில் பலதரப்பட்டவரை ஆராய்ந்த கே பி யின் சிறப்பெண்னேவோ பெண்களில் பல வகைகளை மேற்கோடிட்டு வெளிச்சம் போட்டு காண்பிப்பது.

பத்மினி வைஜயந்திமாலா பானுமதி போன்ற ஆடல் பாடல்களில் தேர்ச்சி பெற்ற நாயகிகளையே அதுவரை கண்டிருந்தது திரை உலகம். பெண் என்பவள் காட்சி பொருளாகவே காண்பிக்கப்பட்டாள். சாவித்திரி ஆயிலும் சரி சரோஜா தேவி ஆகிலும் சரி, ஒன்று அவள் அழுதாள். அல்லது சிரித்தாள். அவள் தனது நாயகனையே சுற்றி சுழன்றாள். அழகிய தேவதை அவள். பொன்னிறம். அதிர்ந்து பேசாதவள். அதிகம் பேசாதவள். குடும்பத்து குத்து விளக்கு. இப்படி அல்லவா அறுபதுகள் வரை  சித்தரிக்கபட்டாள் சராசரி தமிழ் பெண்…

யார் நினைத்தது கண்ணனின் கரிய நிறம் கொண்ட சரிதாவும், சுஜாதாவும், சுஹாசினியும் ஒரு நாள் நம் மனதை கவர்வர் என. எழுபதுகளில் நடந்தேற தொடங்கியது இந்த அற்புதம்.

உடல் அல்ல உள்ளம், அழகல்ல அறிவு – இதுவே மேம்பட்டது, இதுவே பொருள், இதுவே சுகம் என காண்பித்தார் கே பீ , சுஜாதாவை முன்னிறுத்தி. எழுபதுகளின் பண்பட்ட காவியங்கள் மூலம்…

பாடம் புகட்டினார், வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று சில சமயம்.  பொட்டில் அறைந்தது போன்றும் தான் சமயங்களில்… இது தானோ காரணம் நாம் இன்றும் அவரை நினைவு கூறுவதற்கு?

அவள் ஒரு தொடர்கதை.   அவர்கள்.   மாறுபட்ட திரை ஓவியங்கள். திடமான உறுதிபடைத்த பெண்ணாக ஒரு புறம். ஆண் என்பவனால் ஆட்டுவிக்கப்படும் வெறும் பொம்மையாக மறுபுறம்…

சுஜாதாவின் மாமியாரை கண்டு மனம் உருகாதவர் எவர் ‘அவர்கள்’ படத்தில். கதாநாயகி சுஜாதாவினும் மேம்பட்ட கதாபாத்திரம் அல்லவா? அவர்கள்’ மாமியார் போன்ற குணாதிசயம் காண்பது அறிதல்லவா. என்னே நேர்த்தி . செதுக்கிய சிற்பம் போல்… உளி பாலச்சந்தர் அல்லவா! காலில் விழத்தோணும் கதாபாத்திரம். மாமியார் அல்ல, தாய். தாய் அல்ல கடவுள்.

ஆணின் வக்கிரத்தை கணவன் ரஜினி மூலம் சித்தரித்த வித்தை சொல்லில் விவரிக்க முடியாது. ஆனால் கமல் என்ற ஆணின் மூலம் ஆணின் அளவற்ற பேதமற்ற அன்பும் வெளிப்படுவதே அற்புதம். சமநிலை ரவிக்குமார் கதாபாத்திரம். இரு துருவங்கள் மத்தியில் ஒரு நடுநிலை. மூன்று ஆண்வகையுமே இந்நாளிலும் நிதர்சனம்.

அவள் ஒரு தொடர்கதை. பெண் என்பவள் பணிக்கு செல்வது அரிதாகவே காணப்பட்ட எழுபதுகளின் மா பெரும் காவியம். பெண்ணோவியம் என்றே சொல்லலாம்… . பெருமையுடன் கூறிக்கொள்கிறேன், அறுபதுகளில் பணிக்கு சென்றவள் என் தாய் என்பதை. பெண் தன்னை சிங்காரித்துக்கொள்வதும் பேச்சுக்கு உரியதாகவே இருந்த கால கட்டம். சுஜாதா என்ற பணிக்கு செல்லும் துணிந்த பெண்ணின் கர்வம் தான் என்ன. கர்வம் அல்ல அது. தன்னம்பிக்கை. கர்வமாக காணப்பட்டது காலத்தின் விதி. உதட்டில் பூசிய சாயம், தொப்புளுக்கு கீழே நயிலெக்ஸ் புடவை,  பாக் பட்டன் ப்ளௌஸ், தோளில் மாட்டிய ஹாண்ட் பெக், மனதில் சுமந்த குடும்ப பாரம்…மிடுக்கு நடை, கனலை கக்கும் நா, கனிவான இதயம்.. இரக்கமில்லா சொந்தம்… நன்றியில்லா பந்தம், கலைந்த கனவுகள், தொலைத்த வாழ்க்கை… என் உள்ளத்தில் என்றென்றும் குடி கொண்ட அந்த கவிதா (சுஜாதா), ஒரு தொடர்கதை அல்ல… ஒரு கலங்கரை விளக்கம், தன்னையே உறுக்கிக்கொண்டு உலகிற்கு ஒளி தந்த ஒரு மெழுகுவத்தி … காலத்தால் அழிக்க முடியாத அற்புத மணிமேகலை …

துடுக்குத்தனமான படாபட். இளமை குன்றா நடுத்தர வயது விதவைத்தாய். உறவு வரைமுறை மீறின் வாழ்க்கையின் போக்கு தான் என்ன.  துணிச்சல் தவறில்லை சுஜாதாவை போல , ஆனால் அளவு மிஞ்சின கட்டுக்கடங்காத சுதந்திரம் அபாயம் தான் படாபட்டைப்போல.

இப்பொழுது தோன்றுகிறது, கே பி படங்கள் இன்றும் வெளி வருமாயின், பொள்ளாச்சி பயங்கரமே நடந்திருக்காது என. பக்குவமாக வக்கிரமின்றி பாடம் புகட்டுவதில், அதுவும் பெண்டகளுக்கு, கே பி க்கு நிகர் கே பி தான். இன்றளளவும் கே பி தர இயக்குனர்கள் தமிழ் திரை உலகில் மீன்றும் தோன்றாதது, நம் மாபெரும் இழப்பே.

இன்றைய தமிழ் சினிமாவில், குப்பத்து தனுஷ் மீது ஆசை படுவது மேமேலடுக்கு மாடியில் குடியிருக்கும் சீமாட்டி. கைக்கு கிட்டவில்லையெனில் இவர் திரைக்கதை நாயகியை துரத்தி துரத்தி காதலிப்பார், படியும் வரை. எனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்ககூடாது  என்று ஒரு முகமாக காதலித்த பெண்ணை வெட்ட துணியும் பயங்கரம்.. ஸ்வாதி ராம் குமார் ஞாபகம் உள்ளதா? இந்த கன்றாவியை கரைத்து குடித்துதான் நம் இளம் தலைமுறையினர் இன்று முதிர்ச்சி நிலையை நோக்கி பயணிக்கிறார்.

எல்லை மீறுதல்களையும் உறவுகள் நேர்முகமாவதையும் மிக நாகரீமாக காட்ட கே பி தேர்ந்தெடுத்த இன்னொரு முத்து ‘அபூர்வ ராகங்கள்.‘ ‘கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா’ இது ஒன்று போதும் மறு விளக்கம் தேவையல்ல.
‘ஒரு புறம் பார்த்தல் மிதிலையின் மைதிலி, மறுபுறம் பார்த்தல் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தல் நிலவின் எதிரொலி, முழுவதும் பார்த்தால், அவள் ஒரு பைரவி, அவள் ஒரு பைரவி…’ கவிஞர் கண்ணதாசனின் நிகரற்ற வரிகள். உணர்ச்சி ததும்பும் ஒரு பெண்ணை இதைக்காட்டிலும் விவரிக்க நான் கேட்டதில்லை. அப்பேற்பட்ட உணர்வுகளை வெளி கொணர்ந்த மேடை பாடகியாக வந்த ஸ்ரீ வித்யா. முதல் படமா இது. தமிழ் திரைவானின் அறிய ஒரு அபூர்வ நக்ஷத்திரம் எனவே கூறலாம். பட்டாம்பூச்சி போல மாறியது அவளது உணர்வுகள் – நிதானம் மைதிலி போல, பெண்மையின் இலக்கணம் மாதவி போல, அமைதி குளிர் நிலவை போல, அனல் பொறிக்கும் சினம் பைரவி (அம்பாள் அல்லது ராகமாவும் கொள்ளலாம்) போல. என்னை மிகக்கவர்ந்த ஒரு கதாபாத்திரம். நெஞ்சில் ஆழப்பதிந்தது…

அபூர்வ’ ராகங்களை’ பார்க்கையில், எனக்கு நினைக்கத்தோன்றும் கே பி எப்படி காலத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனை கொண்டவராக இருந்தார் என்று… அவர்கள்” மட்டுமென்ன ? பெண் என்பவள் இரு முறை மணம் முறிக்க எண்ணலாம் என்ற எண்ணத்திற்கு முதன் முறையாய் வித்திட்டது என்றே என் மனதில் படும். ஒன்றிற்கு மேலான கதாநாயகன் பாத்திரம் ஆசிரியத்தை இன்றும் உண்டு செய்யும். ‘ஆன்டி ஹீரோ’ என்ற மாறுபட்ட ஒரு குணச்சித்திரத்தை கிட்டத்தட்ட முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் கே பி என்றே சொல்லலாம். எழுபதுகளில் நினைத்துக்கூட பார்க்க இயலாத நடுத்தர வர்க்க கதை.

அரங்கேற்றம். மனதை நெகிழ வைத்த மற்றொரு படைப்பு. குடும்ப பாரத்தை சுமக்க ஒரு பெண் எந்த எல்லைவரை செல்வாள் என்பதற்கான ஒரு சான்று. சூழ்நிலை காரணமாய் தவறிப்போன பாதைகள்… பறிபோன வாழ்க்கை..

ஆண்களில் சிலர் கையால் ஆகாதவராய் இருக்கையில், பெண் என்பவள் செயல்பட்டு ஆக வேண்டிய சூழ்நிலை. பெற்ற தந்தை கரை ஏற்றத்தவறினால் மகள் என்ன செய்வாள். அந்த இல்லத்தின் ஆணாக மாறுகிறாள். மறுபிறப்பு எடுக்கிறாள். ‘அவள் ஒரு தொடர் கதையும்’ அவளே, ‘விலைமாதாக குடும்பத்துக்காக தன உடலையே விற்க ‘அரங்கேறுகிறவளும்’ அவளே. அதுவரை தமிழ் திரையில் சித்தரிக்கப்பட்டதாக தெரியவில்லை. சிவாஜி கணேசனும், எம் ஜி யாரும், ஜெமினி கணேசனும் மரத்தை சுற்றிவந்து காதல் கானம் பாடி, அழகிய பெண்களை காதலித்து, காதலில் பல மோதல்களை சந்தித்து, வீர வசனம் பேசி வாதிட்டு,  களம் இறங்கி வாளிட்டு பகைவரை வதம் புரிந்து வீரத்திருமகனாக ஆண்மையின் வடிவமாக கோலோச்சிய காலம். ஆணும் தோற்கலாம் , ஆண்மையும் பொய்க்கலாம், பெண்ணும் வெல்லலாம், பெண்மையும் நிலை கொள்ளலாம் என அறிய வைத்த விதம் தான் என்ன…

அரங்கேற்றத்தில் கூட, மூன்றாவது ஆணையோ ஏன் முன் பின் தெரியாத பெண்ணையோ நம்பினால் மோசம் போக வாய்ப்புள்ளது என்பதை அப்போதே நமக்கு சொன்னவர் கே பி.

பெண்ணின் திமிரை எடுத்துரைத்தது ‘பூவா தலையா .’ இதில் சில வசனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை தான். அந்த கால கட்டத்தில், பட வினயோகத்திற்காக சேர்க்கப்பட்ட லாஜிக் ஆகவே நான் எண்ணுகிறேன்.பின்னாளில் ஆனால் அந்த தவற்றை கே பி செய்யவில்லை.

நிழல் நிஜமாகிரது படத்திலும் இந்த திமிர் பெண் உண்டு. இதிலும் ஓரிரண்டு ஒவ்வாத வசனம் உண்டு தான். ஆனாலும் அந்த திமிர் எனக்கு பிடித்த திமிர். அடக்கும் ஆண் கமல் ஹாசனையும் பிடிக்கும் என்ன செய்வது?! ‘இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ..’ இந்த கண்ணதாசன் வரிகளை இனியும் இவ்வுலகம் காணுமா. ‘ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்பறை வரை தானே’ என்ற போது எனக்கே ஆத்திரம் ஆத்திரமாக வரும். ஆனால் கதைக்காக சொல்லப்பட்டது என்று மனதை தேற்றி கொள்வேன்…

ஆனால் அந்த மௌலி மற்றும் காசி கதாபாத்திரங்களை மறக்க முடியாது. அதிலும் காசி. இப்படி ஒரு குண சித்திரத்தை இன்றும் தேடி கொண்டிருக்கிறோம் நாம். நெகிழ்வு என்ற சொல்லுக்கு, உணர்ச்சிக்கு அர்த்தம் புரிந்தது அன்று. ஆபாசம் விரசம் கலக்காத காமம் என்றால் என்ன என்று நாயுடு சொல்லி கொடுத்தார். ஹாஸ்யமும் காமமும் கலந்தபோது ஒரு முக சுளிப்பு இல்லை. இதை குடும்பத்துடன் தான் நான் சேர்ந்து பார்த்தேன் எனது பன்னிரண்டாவது வயதில், கருப்பு வெள்ளை டிவியில். தர்ம சங்கடம் இல்லை.

தாமரை நெஞ்சம். சோகம் ஆனாலும் நெஞ்சில் பதியும் விதம். சரோஜா தேவி வைத்து இப்படி ஒரு படம் வேறு யாரும் செய்திருக்க இயலாது.

இரு பெண்டாட்டி கதை ‘இரு கோடுகள்.’ இன்றும் நடக்கும் விஷயம் தான். ஊடகமாக. கையாண்ட நேர்த்தி அருமை. மேலதிகாரியாயை மனைவியை வடிவமைத்த விதம் திண்மை. அந்த மேல் சிந்தனையே ஆச்சர்யம். கருப்பு வெள்ளை பட காலத்தில், சிந்திக்க அறியாது.

‘காவிய தலைவி’ உண்மையில் காவிய தலைவி தான். இன்னொரு கே பி கண்டுபிடிப்பு சௌகார் ஜானகி. பெண்மையின் மேன்மையை மேற்கொடிட்டு காட்டிய இன்னொரு காவியம்.

நியாயத்தையும்,நேர்மையையும், நடுநிலை மாறா நிலையையும் விளக்கியது ‘மேஜர் சந்திரகாந்த்.’ அழகு பதுமை ஜெயலலிதாவின் ஒரே பாலச்சந்தர் படம். யாருக்கும் பயம் வேண்டாம் ஆனால் மனசாத்திக்கு பயந்து தானே ஆக வேண்டும். மனசாட்சி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது யார்.

நூற்றுக்கு நூறு ‘நூற்றுக்கு நூறு’ கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திற்கு. மாணவ சமுதாயம் சீரழியும் இவ்வேளையில், எழுபதுகளிலேயே மாணவர்க்கு உண்மையை மறைவின்றி உள்ளது உள்ளபடி உணர்த்திய கதை. இன்றைய மாணவரே நாளைய குடிமகன். ஆங்கிலோ இந்தியன் சமுதாயத்தை வெளி கொணர்ந்த படம் என்றும் கூறலாம். சமுதாயத்தின் விளிம்பில் வாழ்பவரை உள்கொண்டர்வது கே பி யின் அக்மார்க் முத்திரை. ஜெய் ஷங்கருக்கு ஒரு சபாஷ். நான் சொர்க்கத்தில் (நரகத்தில்??) சந்திக்க ஆவலாக இருக்கும் முதல் நூறு நபரின் ஒருவர்!

சொல்லத்தான் நினைக்கிறேன் – மத்திய தர குடும்பங்களின் நிலை. அதிலும் அந்த கால கட்டத்தில், ஒரு குடும்பத்தில் முதிர் கன்னியர் இருப்பது மிக சகஜம். இந்த படம் எத்தனைபேர் மனதை தொட்டிருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இரண்டே மக்கள் கொண்ட தனி குடுத்தனங்களில் காண்பதற்கரிது. ஆனால் நம்மில் பலர் எண்பதுகளில் கூட கண்டது தான். இந்தியா தான் எவ்வளவு மாறி விட்டது. இந்த பேஸ் புக் யுகத்தில் நான் கே பி யை மிகவும் மிஸ் செய்கிறேன்!

மன்மத லீலை எனக்கு சராசரி ஆணின் மனநிலையை உணர்த்துகிறது. எல்லோரும் அல்ல ஆனால் வாய்ப்பு கிடைத்தால் ஏறக்குறைய என்றே சொல்லலாம்! கமலுக்கு ஏற்ற பாத்திரம்! கே பி க்கு ஞான திருஷ்டியோ?!

புன்னகை மன்னன், புது புது அர்த்தங்கள், தில்லு முள்ளு, ஏக் துஜே கே லியே (ஹிந்தி), டூயட் இவை ஜெனரஞ்சகத்துக்காக எடுக்கப்பட்டவை. காதலும் உண்டு எனினும் பாடல் (ஏக் துஜே) மற்றும் ஹாஸ்யம் (தில்லு முல்லு) இன்று செத்தால் நாளைக்கு பால் விவேக்கையும் ஜெயசித்ரா தெலுங்கு அம்மாவையும் அமைத்த அருமை.

நூல் வேலி, பட்டினப்ரவேசம், தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

மூன்று முடிச்சு . கமல் ரஜினி இணைந்த மற்றுமொரு படம். ஸ்ரீ தேவி நாயகி. அந்த நாளைக்கு எண்ணத்தோன்றாத கோணம் மற்றும் திரைக்கதை. ஸ்ரீ தேவி அப்பா மேஜரை மணக்கும் இயக்கம் கே பி யின் துணிவை நினைவூட்டுகிறது. மக்களிடம் அது மா பெரும்  வெற்றிஅல்லவா பெற்றது. கே பி சொன்னதை  அந்த எழுபதுகளின் அம்மா-அப்பா தலைமுறை ஏற்கும் மனப்பக்குவம் கூட ஒரு புறம் நடந்தேறிக்கொண்டு தான் இருந்தது…

அக்னி சாட்சி. சரிதாவின் அனல் பொரிக்கும் பாத்திரம். சிவகுமாரின் கனிவு. இதில் என்ன அதிசயம் என்றல், இப்போது பரவலாக நாம் காணும் ஒரு வித பாதிப்பை விளைவிக்கும் மனநோயை (schizophrenia எனப்படுவது) பாலச்சந்தர் கையாண்ட விதம். ஆனால் கே பி ஆயிற்றே, ஆகவே அதிசயிக்க என்ன இருக்கிறது. காலத்திற்கு முற்பட்ட சிந்தனை. அதுவே கே பி யின் சிறப்பு. மனா உளைச்சல், மன முறிவு, மனா பாதிப்பு போன்ற மனோவியாதிகளை பற்றி நாம் இப்போது தானே சிந்திக்கவே ஆரம்பித்துள்ளோம்… எண்பதுகளின் ஆரம்பத்தில் … நினைத்துப்பார்க்க கூட முடியாதது. ‘அவர்கள்’ போல.

உன்னால் முடியும் தம்பி யில் ஜாதி பிரிவினை எதிர்த்தார் தன் பாணியில். அந்த துணிவு அவருக்கு அன்றே இருந்தது. இன்றைய ‘பரி ஏறும் பெருமாள்’ அடுத்த தலைமுறை. கூட்டு முயற்சியின் அற்புதத்தை விளக்கிய கதை அது. நாட்டு பற்றையும் சேர்த்து கலந்து கொடுத்தது நாம் அறியா ஊகிக்க முடியா வண்ணம். இதில் வன்மை, நெஞ்சழுத்தம் கிடையாது.  அமைதியாக, ஆனால் ஆணித்தரமாக சொல்லப்பட்ட நீதி போதனை. ஒரு மிக சிறந்த உத்தி.

நாட்டை பற்றி நினைக்கும் போதே நினைவுக்கு வரும் இன்னொரு மெல்லிய சோகம் ‘வறுமையின் நிறம் சிவப்பு.‘ வேலை இன்மையின் தாக்கம், வறுமையின் கொடுமையை இவ்வளவு வலிக்கும் விதத்தில் அதே சமயம் எந்த பாத்திரத்திற்கும் சுய மரியாதை குன்றாமல் கூறிய விதம்… பல தமிழ் படங்களில், வறுமையின் அவலத்தை தான் நாம் பார்க்கிறோம். வறுமை கூட அழகு தானோ என்று நினைக்க வைத்த நெஞ்சை உருக்கும் காவியம்… ‘நல்லதோர் வீணை செய்தேன்… அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ…’ என பாரதியின் பாடலுக்கு உயிர் தந்த அந்த திரை ஓவியம், கே பி என்ற சிகரத்திற்கு மற்றும் ஒரு உச்சம்.

‘தண்ணீர் தண்ணீர் ‘போன்ற படங்களை இனி பார்க்க முடியுமா. சமூகத்தில் விழிப்புணர்வை இதை விட எப்படி தட்டி எழுப்ப இயலும். நீர் என்பது இன்றைக்கும் நமக்கு பிரச்சனையே. வீட்டு பிரச்சனை, மாநில பிரச்சனை, தேச பிரச்சனை, பன்னாட்டு பிரச்சனை. எவ்வளவோ விதத்தில் கையாள வாய்ப்பிருந்தும், கே பி காண்பித்தது ஒரு கிராமிய கதையை. நகரத்தில் இன்றும் நமக்கு நீர் விநியோகம் உண்டு. தண்ணீர் லாரி வழியோ அல்லது போர் பம்ப் போட்டோ விடிவு தேடி கொள்ளலாம்… கிராமங்கள் காய்கின்றன வறட்சியில். இது மிக பெரிய கொடுமை. கிராமவாழ் மக்களை பற்றி சிந்திப்பவர் யார். குரல் கொடுப்பர் தான் யார். வக்காலத்து வாங்குபவர் யார்.

சரிதாவின் இன்னொரு காவியம், ‘அச்சமில்லை அச்சமில்லை.’ அன்றைய இன்றைய அரசியல் சூழ்நிலையை அப்படியே படம் பிடித்து காட்டும் நேர்த்தி. பண்பட்டவனும் படைத்தவனும் பண்டிதனும் கெடுவான் அரசியலில். இங்கு எவரும் ஒழுங்கு அல்ல. ஒழுக்கம் அல்ல. மனது வலிக்கிறது ஆனால் நிதர்சனமான உண்மை.

ஒரு வீடு இரு வாசல், கல்கி, பொய் … ‘கல்கி’ என்னால் முழுமையா ஏற்க முடியா ஒன்று. ஒருவேளை இது கே பி யின் பரிமாண வளர்ச்சியோ என்று நினைக்கத்தோன்றும் சமயத்தில். கல்கி ஒரு விதண்டா வாதம் என கூட தோன்றும். ‘பொய்’ அதை நிரூபித்தது. பொய்யின் காதல் தர்க்கம் எனக்கு பிடித்தது ஆனால் முடிவு உடன்பாடில்லை. ஒரு வீடு இரு வாசலில் சௌகார் பேத்தியின் கதாபாத்திரம் அம்மம்மா… சூர்யாவுக்கு அழவில்லை, இவளுக்கு அழுதேன், இந்த நங்கை நல்லாளுக்காக… ஆங்கிலத்தில் சொல்வர் ‘ஸ்ட்ரென்த் ஆப் காரெக்ட்டர்’ என்று. கே பி யின் ஒவ்வொரு நாயகியிடமும் அதை நான் பார்க்கிறேன்.

நள தமயந்தி’ ஒரு இனிய காதல் கதை. கே பி இடம் எதிர் பாராதது. மாதவனுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு. அழகிய வாய்ப்பும் கூட.

பல பக்கம் போகலாம் இன்னும்…

‘கல்யாண அகதிகள்‘ ளோடு நிறுத்திக்கொள்கிறேன். மத மாற்ற எதிர்ப்பையும் , பெண்ணியத்தையும் இதைவிட கண்ணியமாக சொல்ல முடியாது. சரிதா, நீங்க எங்கே. காதலுக்காக தன் சுய மரியாதையை, அடையாளத்தை, முகவரியை, பாரம்பரியத்தை இழக்க முன்வரும் அணைத்து பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. மதம் மாறினால் தான் திருமணம்  என்றால் அது காதலே அல்ல ஒரு கணக்கு, அவ்வளவு தான். இன்றைய கால கட்டத்தில், இது எப்பேர்ப்பட்ட அளப்பரிய உண்மை. அது சொல்லப்பட்ட விதம் தான் என்ன. பெண்களின் வாழ்க்கை போராட்டங்களை, அவலங்களை, வெற்றிகளை, மன குமுறல்களை, இழப்புகளை, பெருந்தன்மையை, சுயநலமற்ற தன்மையை எடுத்து காட்டும் கட்டுக்கோப்பான திரைக்கதை. திரைக்கதை என்பது கே பி யின் மிகப்பெரிய பலம். வசனமும் கூட.

சரிதா சுஜாதாவின் கோபத்தை, சுஹாசினியின் கேள்வியை இன்றும் சமாளிக்க முடியவில்லை நம்மால், சாந்த படுத்த இயல வில்லை நம்மால்… நியாமானா கோபம், நேர்மையான கேள்வி… பதில் சொல்வதில் நம்மில் பலருக்கு ஏன் இன்னும் தயக்கம்

நான் நினைப்பது உண்டு இப்போதும். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டக்காரர் நம் பெற்றோர் என. கே பி படங்களை இனிமையான சலனமற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் திரையில் கண்டமைக்கு. இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே அப்பொழுது கிளர்ச்சியற்ற ஆரவாரமற்ற ஆழ்ந்த அமைதி நிலவியதாகத்தோன்றும். குண்டு வெடிப்பு கண்டிராத காலம். தீவிர வாதம் தலைவிரிக்காத நேரம். கணினி கிடையாது ஏன் தொலைக்காட்சி  பெட்டி கூட நம்மில் முக்கால் வாசி பேர் வீட்டில் கிடையாது. நம் பெற்றோர் எப்பொழுதாவது சிந்தித்தனரா கே பி யின் கருக்களை பற்றி. வாழ்க்கையில் கடை பிடித்தனரா… கடை பிடித்தனரோ இல்லையோ, வேசினாரோ கூட என்னவோ தெரியாது, கே பி இடம் அவர் கொண்ட மரியாதை மட்டும் அலாதி தான். உண்மை உரைத்திருக்க வேண்டும். காலத்திற்கு அப்பாற்பட்ட கதையாகிலும், உட்கருத்து  நெஞ்சை உறுதியிருக்க வேண்டும். எண்டபதுகளிலேயே ஜீரணிக்க என் தலைமுறை தவித்தது. சொல்லப்பட்ட மாற்று செய்தி, மாற்று நோக்கு, மாற்று பார்வை இவையே எண்பதுகளில் பள்ளி பயின்ற என் வயது ஆண் பெண்களை ஒரு நிமிடம் நிற்க வைத்தது, சிந்திக்க வைத்தது. அந்த தாக்கம் தானோ என்னவோ, இன்றளவும் எம்மில் பலர் மாற்று சிந்தனை கொண்டவராய் உள்ளோம்… எமது இந்த முதிர்ச்சி – அப்படி சொல்லலாமா என தெரியவில்லை – இதற்க்கு வித்திட்டவர் கே பி . எமது தாய் தந்தை நினைத்து செய்ய இயலாதவற்றை நாம் இன்று மேற்கொள்கிரோம் … தைரியமாக, வீரியமாக, விவேகமாக…