Posted in Food For Soul

தமிழ் தமிழ்ன்னு சொல்றாங்களே…

தமிழர் பண்பாடு சரசரக்கும் பட்டு புடவைலையோ, நெத்தியில வெச்சுக்கற குங்குமத்துலயோ,தலைல சூடுற ஜாதி மல்லி பூச்சரத்திலேயோ, போட்டு மினுக்கர வைர அட்டிகைலையோ வைர கம்மல்லையோ இல்ல. இட்லி தோசை பொங்கல் வடைல இல்ல. சத்தியமா பில்டர் காபில இல்ல. படிக்கற சங்க இலக்கியத்துலயும் இல்ல. மேடை நாடகத்தில இல்ல. பாக்கற சினிமா படத்தில இல்ல. சுஜாதா பாலகுமாரன்லையும் இல்ல. வைரமுத்துவுலயும் இல்ல தாமரைலயும் இல்ல எப்படி கண்ணதாசன்ல இல்லையோ வாலில இல்லையோ அப்படி . பட்டி மன்றத்திலே இல்ல. விவாத மேடைல இல்ல. திராவிடத்திலேயே இல்ல அப்போ சீர்திருத்த கல்யாணத்துல இருக்குமா என்ன. பட்டபடிப்புல இல்ல. எந்த புத்தகத்திலயும் இல்ல. கீழடில அகழ்வாராய்ச்சில இல்ல. பொங்கல் பானைலயும் காணோம். பனை தென்னை உச்சிக்கும் போகல. திருவள்ளுவர்கிட்டையும் இல்ல, ஒளவையார் கிட்டயும் இல்ல. சேர சோழ பல்லவ பாண்டியன் கிட்ட இல்ல. நக்கீரன் கிட்டையும் இல்ல அப்போ தருமி கிட்ட எப்டி இருக்கும். கண்ணகி எரிச்ச மதுரைலேயும் இல்ல. தஞ்சாவூர் பெரிய கோவில்லயும் இல்ல. கரை புரண்டு ஓடற காவிரியில் இல்ல, காணாமல் போன குமாரி கண்டத்தலையும் இருந்தது இல்ல. அப்போ தமிழ் எங்க தான் இருக்கு.

தமிழ் எங்க இருக்குன்னா அது நம்ம வாழற, மனசாட்ச்சிக்கு உறுத்தாத கௌரவமான வாழ்க்கைல இருக்கு . ஒழுக்கமே தமிழர் பண்பாடு. காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாறலாம் தப்பு இல்ல. நம்ம கலாச்சாரத்தையே தல கீழ புரட்டி போடும் எந்த விதமான பழக்க வழக்கமும் தமிழ் பண்பாடு ஆகாது. குடியும் குடுத்தனமா இருன்னு சொல்றதுக்கு அர்த்தம் பார வீட்ல வெச்சுக்கோ என்பது இல்ல. ‘பெருசுகள் இல்லாத வீடுகள் கடவுள்கள் வாழாத கோவில்கள்’ ன்னு ஒரு சினிமா பாட்டு வரி ஞாபகம் வருது. மேல துப்பட்டா போட்டுட்டு வெளில போன்னு சொல்ற மாமியார் அருமையை இப்போ உணரறேன். படிக்கட்டுல பாத்து ஹலோ சொன்னாகூட பக்கத்து பிளாட் மாமாவை மொறச்சுட்டு பதில் சொல்லாம போக வெக்கறது எவ்வளவு பெரிய சேவைன்னு இப்போ தெரியுது. வெட்டி பேச்சு என்னத்துக்குன்னு முணுமுணுக்கறதுலயே வந்தவங்க விலாசம் இல்லாம ஓடி போய்டுவாங்க. எந்த புது டிரஸ் வாங்கினாலும் எத்தனை டிரஸ் வாங்குவ நிறுத்து போதும், இருக்கறத போடுன்னு சொல்ற சித்தி அருமை விளங்கறது. கொஞ்சமே வீட்ல இருந்தாலும் ஸ்விக்கி இல்லாத நாட்கள்ல கூட இருந்தத விருந்தாளியோட பகிர்ந்து சாப்பிடறது இல்லயா தமிழ் பண்பாடு. பாக்கறவங்க எல்லாம் அண்ணா தம்பி தான். அக்கா தங்கை தான். பக்கத்துவீட்டு பசங்க நம்ம பசங்க. அடுத்தவீட்டு பாட்டி நம்ம பாட்டி. ஒண்ணுன்னா ஓடி வருவாங்க. நல்லதை தான் சொல்லி குடுப்பாங்க வீட்டு பெரியவங்களும் சரி, பிரெண்ட்ஸ் அம்மா அப்பாவும் சரி. தவறான என்கரேஜ்மெண்ட் எப்பவும் எந்த விஷத்திலயும் கிடையாது. தப்பு பண்ணினா பக்கத்துக்கு வீட்டு மாமி தான் மொதல்ல டோஸ் விடுவாங்க. மூடி மறைக்கற விஷயமே கிடையாது. சிவன் கோவில் சொத்து குல நாசம்னு சொல்லி தான் வளத்தாங்க. வில்வ இலையை கூட நாங்க வீட்டுக்கு கொண்டு வந்தது கிடையாது. இந்த மாதிரி அன்பான பொறுப்பான சத்தியமான குடும்ப சூழ்நிலை, சுற்றார் கூட வளர, வாழ குடுத்து வெக்கணும். என்னை பொறுத்தவரைக்கும் இதுவே தமிழ் கலாச்சாரம், பண்பாடு. நாங்களும் இருபத்தி அஞ்சு வருஷம் முன்னவே வேலைக்கு போனவங்க தான். ஜீன்ஸ் போடறவங்க தான். சைட் அடிக்கறவங்க தான். ஸ்கூட்டர் கார் ஓட்டினவங்க தான். அம்பத்தஞ்சு வருஷம் முன்னாடி வேலைக்கு போனவ தான் என் தாய். சுய சம்பாத்தியத்தில் காலூன்றி நின்னவ. இல்லாமையே அவ என்ன வளர்த்தது தான் அபாரம்.

எனக்கு ஒரு சந்தேகம். தமிழ் தமிழ்னு அலப்பறை செய்யறவங்க ஏன் தமிழர்க்கே உரித்தான கற்பு நெறியை பத்தி பேச மாட்டேங்கறாங்க. ரு வில் ஒரு சொல் ஒரு இல்னு சொன்ன கம்ப ராமாயணத்தை எப்படி மறந்தாங்க. மயிர் நீத்தால் உயிர் நீங்கும் கவரி மான் போல மானம் வளர்த்தது தமிழ் இல்லையா. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியா இருக்க வேணாம். முல்லையா வேரோட புடுங்காம இருந்த போறதா

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்வாங்க தமிழ்ல. அப்டி வெளி நாடு தேடி போய் பொருள் ஈட்டறவங்க கூட பலரும் நம்ம கலாச்சாரத்திலேந்து மாறாம இருக்கறத பாக்கலாம். வீக் எண்டு பார்ட்டி இங்கயும் எப்போவாவது உண்டு தான். காக்டெய்ல் கூட. லேடீஸ் உட்பட. எதுக்கு பொய் சொல்லணும். ஆனா முறை தவறி, அளவு மீறி எல்லை தாண்டி நான் எதையும் என் இருபத்தி அஞ்சு வருஷ ஃபாரின் வாழ்கைல பாத்ததும் இல்ல கேள்வி பட்டதும் இல்ல. மாறாக கோவில் இல்லாத ஊர்ல பூஜையை பாக்கறேன். பாட்டும் பரதமும் பாக்கறேன். கொலு வெச்சு பாக்கறேன். உண்மையான அடக்கத்தை பாக்கறேன். கண்டிப்பா அது உடைல இல்ல. ஆடம்பரத்தில இல்ல. முக்கியமா விளம்பரத்துல இல்லவே இல்ல.தமிழ் நம்ம வாழ்க்கை நெறியில் இருக்கு. குடும்ப நேர்த்தில இருக்கு. கண்ணியத்தில இருக்கு. கட்டுப்பாட்டுல இருக்கு. அமைதில இருக்கு. எளிமைல இருக்கு. இறக்கத்துல இருக்கு. தமிழ்நாட்டுக்கு வெளியில தமிழ் இப்டி நல்லாவே வாழறது. மாட மாளிகைல இருக்கோ இல்லையோ ஏர் ஒட்டி களைத்து போன குடியானவனோட குடிசைலயும் அவன் வேர்வையிலும் இருக்கு. உழைத்து வாழறது. கஷ்டப்பட்டு வாழறது. நாணயமா தலை நிமிர்ந்து வாழறது. பெருமையா வாழறது. கௌரவமா வாழறது. சீரழிஞ்சு போகல. யாரையும் கெடுக்கல. யாரோடதையும் பிடுங்கல. பொய் பித்தலாட்டம் இல்ல. அலட்டல் இல்ல. பொறாமை இல்ல. நாட்ல, தமிழ்நாட்ல, எவன் ஒருவன் இப்டி யோக்கியமா வாழறானோ, அவன் வீட்ல தமிழ் வாழத்தான் செய்யறது. குடும்ப குத்துவிளக்குன்னு ஒன்று கிடையவே கிடையாதுன்னு என் தோழி சொன்னபோது என் மனசு அந்த பாடு பட்டது. காலத்து ஏற்ப கொஞ்சம் வளைஞ்சு கொடுக்கறவ தான் நானும். நான் ரொம்ப யோக்கியம், நான் தான் யோக்கியம்னு சொல்ல வரல. ஆனா இன்னிக்கும் நம்ம முன்னோர் காட்டிய பாதைலேந்து விலகி போற தைர்யம் எனக்கு கிடையாது. அப்டி பட்ட முன்னேற்றம், நவ நாகரீகம் எனக்கு தேவையே இல்ல. எனக்கு தெரிஞ்ச தமிழ் இது தான். நல்லது, ஆயிரம் காலத்து பயிர். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். இதுவே தமிழுக்கான அர்த்தம். தமிழ் குடிகொண்டு வாழற இடம் சுயமரியாதை.

தமிழர் என்றொரு இனம் உண்டு… தனியே அவற்கொரு குணம் உண்டு…!