சில நாட்களாக என் மனத்திரையின் பின்னால் ஓடி கொண்டிருக்கும் ஒரு விவாதம் இது. துறவரம் தான் கொள்ள வேண்டுமா என்ன. எம்ப்போன்றோருக்கு இல்லறமே நல்லறம் தான். குடும்பத்தில் இருந்து அறத்தை மேற்கொள்வது எப்படி. லௌகீக வாழ்க்கை பின்பற்றி மட்டுமே ஒருவர் சத்கதி அடைய இயலுமா. இது சாத்தியமா. இது போன்ற கேள்விகள் என் ஆழ் மனதில் வந்து வந்து போயின. முடியும் என்று சொல்கின்றனர் நான் சந்தித்த ஆன்மீக சான்றோர். குடும்பமே யாவற்றிற்கும் அடிப்படை. குடும்பத்தை நேர்த்தியாக கொண்டு சென்றாலே நமக்கு மோக்ஷம் தான். குடும்பத்திற்காக அயராது சுயநலம் இன்றி உழைப்பது, ஒழுக்கத்தை பேணுவது, வயதில் மூத்தோரை மதித்தல், பராமரித்தல், அனைவரிடமும் அன்பு காட்டுதல், நம்மிடம் பணி புரிவோர் – வீட்டு வேலை செய்யும் பெண், வண்டி ஓட்டுனர், தோட்டக்காரர், சமையல் காரர் – போன்றோரை சக மனிதராக பாவித்து மரியாதையாக நடத்துதல், பிள்ளைகளை நன்கு பேணுதல், நல்ல குடிமகன்களாக நாம் பெற்ற பிள்ளைகளை உருவாக்குதல், பூஜை புனஸ்காரங்களை இல்லறத்தில் சிறக்க செய்தல், கோவில்களுக்கு நன்கொடை, வீட்டில் விருந்தாளிகளை நன்கு ஓம்புதல், நட்பு பாராட்டல், நேரம் கடமை தவறாமை, நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவர்க்கு செய்தல், யார் குடியையும் கெடுக்காது இருத்தல்,ஒழுக்கம் தவறாமை, பக்தி மேன்மை, நலிந்தோர்க்கு உணவு உடை மற்ற தேவையான உதவி புரிதல், பண உதவியை காட்டிலும் உடல் உழைப்பால் மற்றவர் பயன் உறும் வகையில் உதவுதல், மற்றவர்க்கு நற்போதனை செய்தல், அடுத்தோற்கு நல் வழி காட்டுதல், உண்மையை உரைத்தல், பொய் இன்மை, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடத்தல், ஏமாற்று வேலை செய்யாதிருத்தல், பொறாமை வயிற்றெரிச்சல் கொள்ளாதிருத்தல், நம்பிக்கை துரோகம் புரியாதது இருத்தல், நம்பிக்கை, மரியாதை காப்பது, பேணுவது, பேராசை அற்று இருத்தல், மனசாட்சியை விலை பேசாதிருப்பது, போலி கௌரவம் கொள்ளாதிருத்தல், யார் வாழ்வையும் கெடுக்காதிருத்தல், வயதுக்கேற்ற மன முதிர்ச்சி, இனிமையான இயல்பு, நேரான நேர்மையான வாழ்க்கை, ஒளிவு மறைவு இல்லாமை, பார பட்சம் பார்க்காமை, அணைத்து உயிர் இனங்களை நேசித்தல், விலங்கு பறவை மரம் செடி கொடி போன்ற தாவர இனங்கள், நடப்பன பரப்பன ஊர்வன முதலிய எல்லா ஜீவன்களையும் ரசித்தல் அன்பு செய்தல், இயன்றால் பராமரித்தல், கற்பு, மானம் காப்பது, இன்னும் இப்படி பல நெறிகள் உள்ளன.நல்லவரிடம் சொல்லவே வேண்டாம். நன்னடத்தை சொல்லி வருவது இல்லை. ரத்தத்தில் வருவது. தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டி வளர்ப்பது. இப்படி ஒரு நேர்த்தியான குடும்ப வாழ்க்கை உங்களது என்றால், கோவிலில் கூட நீங்கள் தெய்வத்தை தேட வேண்டாம். கடவுள் வாழும் இல்லம் உங்கள் இல்லமாகும். உண்மையான பாசிட்டிவிட்டியே இது தானே ஒழிய தவறான போக்கோ தரம் கெட்ட வாழ்க்கை முறையோ அன்று. நம் நடத்தையே நம் குடும்ப மேம்பாட்டிற்கு அடித்தளம். ஒரு குடும்பத்தின் ஆணி வேறானா தாயே சரியில்லை என்றால் அந்த குடும்பமே பாழ் தான். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் தான் ஓடுவது ஓடிக்கொண்டு இருக்கும். நல்லோர் கூட்டு இதற்கு தான் அவசியம்.நல்லது கெட்டது எது என்று பகுத்து உணர நல்லவர் நட்பே முக்கியம். வீட்டில் பெரியவர் இருந்தால் பார் வைக்க முடியுமா. தர்மம் என்பது இடத்துக்கேற்ப நிர்ணயமாகும். லௌகீக தர்மம் நல்ல மேன்மையான நன்னெறி வாழ்க்கை வாழ்வதே. ஒழுக்கமே இங்கு அடிப்படை. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்று இதற்க்கு தான் உரைத்தார். தலையே போனாலும் நெறி தவறாமை முக்கியம். இன்றளவும் இப்பேற்பட்ட நட்பை பெற நான் பாக்கியம் தான் செய்துள்ளேன். தவறை தவறு என்று சுட்டி காட்டி திருத்த உண்மைக்கு பின்வாங்காத நட்பும் சுற்றமும் அவசியம். நம் குழந்தைகளுக்கு நாம் விட்டு செல்வது இந்த செல்வத்தை தான் முதலில். நான் வேண்டுவது எல்லாம், என் குடும்பத்திற்கு ஒழுக்கம், நாணயம், கடின உழைப்பு, நேர்மை, கட்டுப்பாடு இவைதான். ஓரளவு வாழ்க்கைக்கு தேவையான பணம் போதும். அதிகம் இருந்தால் அதுவே ஆல கால விஷம். உழைக்காத பணம் இன்னும் வீண். லௌகீக வாழ்க்கையில் தர்மம் பின்பற்றாத எவருமே கடவுளை கும்பிட்டு பலனில்லை. ஒரு ஓட்டையான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொண்டே இருங்கள். நீர் நிறையுமா என்ன. அது போல தான் லௌகீக வாழ்க்கையில் அதர்மத்தை பேணுபவர் நிலையும். அதர்மம் நம்மை என்றும் ஜெயிக்க விடாது. நம் பாட்டிகளுக்கு மறு பிறவியே கிடையாது. கோவிலுக்கு சென்று வழிபட கூட அவருக்கு நேரம் இருந்தது இல்லை. பிள்ளைகளை வளர்த்து, பின் பேர குழந்தைகளை வளர்த்து கொடுத்து, சதா சர்வ நேரமும் அடுக்களையில் உழைத்து ஒய்ந்து தேய்ந்து, வீட்டுக்கு வருவோரை உபசரித்து அன்புடன் வயிறு புடைக்க உணவிட்டு விடைகொடுத்து அனுப்புவது, இதை தவிர எதை கண்டனர். இந்த லௌகீகமே ஒரு தெய்வீகம் தான். ஆலமரமாய் அதனால் தான் நம் குடும்பங்கள் இன்றும் விஸ்தாரமாய் கிளை பரப்பி ஊன்றி நிற்கின்றன. அதன் குளிர் நிழலில் தான் நாம் இன்று இளைப்பாறி கொண்டு இருக்கிறோம். அந்த ஞான பழங்கள் தான் இன்று உண்மையா நமக்கு சோறு போடுவது. இது தான் நாமும் நம் பிள்ளைகளுக்கு முதலில் ஆற்ற வேண்டிய கடமை. இல்லறம் நல்லறம். லௌகீக வாழ்க்கையில் தர்மம் கடைபிடிப்பது, அம்பாளுக்கு மிக பிடித்த ஒன்று. நம் கடமையை நாம் செய்யும் போதும், நாம் அற வழியில் நடக்கும் போதும், அம்பாள் நம் பக்கத்திலேயே துணை நிற்பாள். நம்மிடம் வேள்வி அவள் எதிர்பார்ப்பதில்லை. கோவிலுக்கு கூப்பிடுவதில்லை. நன்றாக உன் கையால் சமை. விருந்தோம்பு. ஒழுக்கம் பேண். நெறி தவறாது நட. இந்து பெண்களுக்கு கற்பு தெய்வீகம் தான். நல் வழி லௌகீகத்தில் அம்பாளுக்கு அவ்வளவு நாட்டம். எனக்கு தெரிந்த ஆன்மீக மக்கள் சொல்ல கேட்டு உரைப்பது இது. லௌகீக தர்மமே இந்த கலி யுகத்தில் உகந்தது, நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருவது. லௌகீக தர்மம் பேணி நம் வாழ்வை செம்மை செய்வோம்.